| ADDED : ஜூலை 24, 2024 09:47 PM
ராமநாதபுரம்:-ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமான வழக்கில் சிறப்பு ஆணைய விசாரணை நிறைவடைந்த நிலையில் இதன் அறிக்கை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படுகிறது.இக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மாயமானது குறித்து கோயில் திவான் பழனிவேல் பாண்டியன் புகாரில், ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் ஸ்தானிகர் சீனிவாசன் மீது வழக்குப்பதிந்தனர்.சீனிவாசனுக்கு முன் ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளை ,சிவகங்கை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சங்கர், மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர் கோயில் நகைகளை மதிப்பீடு செய்து, நகை மாயமானது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனடிப்படையில் சிறப்பு ஆணையத்தினர் ஒரு வாரமாக ஸ்தானிகர் சீனிவாசன், முன்னாள் பொறுப்பாளர்களிடம் விசாரித்தனர். சீனிவாசன் கூறிய கருத்துக்கள் குறித்து மற்றவர்களிடம் விசாரித்துள்ளனர்.கோவில் கருவூலத்தில் உள்ள நகைகளை சரிபார்த்தனர். காணாமல் போன நகைகள் என்னென்ன, அதற்கு ஸ்தானிகர் பதில் என்ன என மறு ஆய்வு செய்தனர். ஏற்கனவே மாயமான நகைகள் திரும்ப ஒப்படைத்தது தொடர்பாகவும் விளக்கம் பெற்றுள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் சிறப்பு ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.