| ADDED : ஆக 06, 2024 04:52 AM
திருவாடானை: தொண்டியிலிருந்து மதுரைக்கு டவுன் பஸ் போல் இருக்கைகள் குறைவாக உள்ள பஸ் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.தொண்டியிலிருந்து மதுரை 110 கி.மீ.,ல் உள்ளது. இங்கிருந்து பல அரசு பஸ்கள் திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரைக்கு இயக்கபடுகின்றன. கடந்த சில மாதங்களாக தொண்டியிலிருந்து மதியம் 12:10 மணிக்கு டவுன் பஸ் போல் ஒரு பஸ் மதுரைக்கு செல்கிறது.இந்த பஸ் மதுரையில் இயக்கப்படும் டவுன் பஸ் போல் காணப்படுகிறது. இருபக்கமும் டவுன் பஸ் போல் இரு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேல்பகுதியில் பொருட்கள் வைக்க வசதியில்லை. மதுரை வர்த்தக நகரமாக இருப்பதால் தொண்டி, திருவாடானையிலிருந்து தினமும் வியாபாரிகள், பொதுமக்கள் செல்வார்கள். இதனால் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற பஸ்களில் ஒரு பக்கம் மூன்று இருக்கையும், மறு பக்கம் இரு இருக்கைகளும் இருப்பதால் பயணிகள் அமர்ந்து செல்ல வசதியாக இருக்கும். ஆனால் டவுன்பஸ் போல் இருக்கும் இந்த பஸ்சில் இருக்கைகள் குறைவாக இருப்பதால் நின்று கொண்டே செல்ல வேண்டியதுள்ளது. லக்கேஜ் பொருட்கள் வைக்க வசதியும் இல்லை. பயணிகளின் வசதியை கவனத்தில் கொள்ளாமல், அவர்களை அவதிக்கு உள்ளாக்கவே இதுபோன்ற பஸ்கள் இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.