| ADDED : ஜூலை 28, 2024 11:58 PM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் நகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.ராமநாதபுரம் வர்த்தக சங்கம் சார்பில், தலைவர் ஜெகதீசன், பொது செயலாளர்கள் கோவிந்தராஜன், ஜீவானந்தம், டாக்டர் சாதிக்அலி ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு கொடுத்துள்ளனர். இதில், ராமநாதபுரம் - கீழக்கரை ரயில்வே மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ராமநாதபுரத்தில் சட்டக்கல்லுாரிக்கு புதிய இடத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பஸ் வசதிகளையும் செய்து தர வேண்டும். அம்மா பூங்கா தெற்குப்பகுதியில் உள்ள உடற்பயிற்சிக்கூடம் சீரமைப்பு செய்து குழந்தைகள், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ராமநாதபுரம் பாதாள சாக்கடை வடிகால் குழாய்களை புதியதாக மாற்றிட வேண்டும். கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்புகளை சரி செய்து சீராக குடிநீர் வழங்க வேண்டும். தங்கச்சிமடம், பார்த்திபனுார் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். ராமநாதபுரம் நகராட்சியுடன் அச்சுந்தன்வயல், முதுனாள், சூரங்கோட்டை, பேராவூர், காட்டூரணி, பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்திட வேண்டும். ராமநாதபுரம் பாதாள சாக்கடை திட்டத்தில் பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை பகுதிகளை இணைத்து வடிகால் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.