| ADDED : பிப் 08, 2024 01:59 AM
சேதுபாவாசத்திரம்,:ராமேஸ்வரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக நாகப்பட்டினம் செல்லும் அரசு பஸ், வல்லவன்பட்டினம் அருகே சென்று கொண்டு இருந்தது. பஸ்சை டிரைவர் முத்தமிழ் இயக்கினார்; கண்டக்டராக ரமேஷ்குமார் இருந்தார். அதே நேரம், பால் ஏற்றி செல்லும் லோடு வேன், கன்னியாகுமரியை நோக்கி சென்று கொண்டு இருந்தது. பால் வாகனத்தை டேவிட்ராஜ், ஜஸ்டீன் இயக்கினர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில், வல்லவன்பட்டினம் அருகே, நேற்று மாலை பால் வாகனமும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதின.இதில், சாலையோரம் அருகே குட்டையில் அரசு பஸ் கவிழ்ந்தது. இதையடுத்து சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், கண்ணாடிகளை உடைத்து, பயணியரை மீட்டனர். இதில் 32 பயணியர் படுகாயமடைந்தனர்.அவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி மற்றும் அறந்தாங்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.