ஆந்திர மீனவர்கள் 4 பேர் இலங்கையில் விடுவிப்பு
ராமேஸ்வரம்:இலங்கை நீதிமன்றம் விடுவித்த ஆந்திர மீனவர்கள் 4 பேரை படகுடன் கடற்படையினர் அனுப்பி வைத்தனர். ஆந்திர மாநிலம் நெல்லுாரை சேர்ந்த மீனவர்கள் பந்தாடி பிரம்மானந்தம் 53, கரிநாகராஜு 40, சிந்தா நாகேஸ்வரன் 49, சீனுகொப்பாடி 50, ஆகியோர் ஆக.,2ல் கன்னியாகுமரியில் புதிய படகை வாங்கிக் கொண்டு புதுச்சேரி வந்தனர். பின் ஆக.,4ல் வங்கக்கடலில் மீன் பிடித்த போது திசைகாட்டும் கருவி பழுதாகியதால் இலங்கை எல்லைக்குள் படகு சென்றது. அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அம்மீனவர்களை எல்லை தாண்டியதாக கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இவர்களை செப்.,12ல் ஊர்காவல்துறை நீதிமன்றம் படகுடன் விடுதலை செய்தது. இதனையடுத்து நேற்று காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து ஆந்திர மீனவர்களை அவர்களது படகுடன் இலங்கை வீரர்கள் அழைத்துச் சென்று இந்திய எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். பின் மீனவர்களை ஆந்திரா செல்ல இந்திய வீரர்கள் வழிகாட்டி அனுப்பினர்.