| ADDED : ஆக 17, 2024 12:25 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 500 இடங்களில் விநாயர்கள் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு செப்., 8, 9ல் விசர்ஜன ஊர்வலம் நடத்தப்படுகிறது. ஹிந்து முன்னணி சார்பில் ராமநாதபும் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி தினமான செப்.7 ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத 500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்யப்படுகிறது.தொடர்ந்து செப்., 8, 9 தேதிகளில் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, பரமக்குடி, உச்சிபுளி, ஏர்வாடி, தேவிபட்டினம், தொண்டி, சாயல்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.இந்த ஆண்டு விநாயகர் திருமேனி சிலைகள் எளிதில் கரைவதாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்தாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஹிந்து முன்னணி சார்பில் ' தமிழகத்திற்கு ஆபத்து' 'குறைந்து வரும் ஹிந்துக்கள் ஜனத்தொகை' என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டு நடக்கிறது.ஹிந்துக்களின் ஒற்றுமை திருவிழாவாகவும், எழுச்சி விழாவாகவும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கே.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை, விஜர்சன ஊர்வலங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார்.