அபிராமத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை வேண்டும்
கமுதி : -அபிராமத்தில் இருந்து முதுகுளத்துார் செல்லும் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.கமுதி அருகே அபிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அங்கு பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 150க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. அபிராமத்தில் இருந்து முதுகுளத்துார் செல்லும் ரோட்டில் பேட்டை தெரு, முஸ்லிம் பஜார், செவ்வல்தோட்டம் பகுதியில் குறுகலான ரோடு என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவ்வழியில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள், அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அவசரகாலத்தில் செல்லும் ஆம்புலன்ஸ் வழிவிட்டு செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். முதுகுளத்துாரில் இருந்து மதுரைக்கு செல்லும் சிலர் அபிராமம் செல்லாமல் கண்ணாத்தான் முக்குரோட்டில் இருந்து பிரிந்து 5 கி.மீ., சுற்றி மதுரை செல்லும் ரோடு வழியாக செல்கின்றனர். எனவே இனிவரும் காலங்களில் வாகன ஓட்டிகளின் நலன்கருதி நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவரும் புறவழிச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.