மேல் தளத்தில் செயல்படும் ஆதார் சேவை மையம்: முதியோர் பாதிப்பு
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ் மங்கலத்தில் பேரூராட்சி அலுவலக மேல்மாடி கட்டடத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்தால் முதியவர்கள் பாதிப்படைகின்றனர். நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக திகழும் ஆர்.எஸ். மங்கலத்தில் வட்டாரத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் பயனடையும் வகையில் ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆதார் சேவை மையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் குழந்தைகளுக்கு ஆதார் பதிவு மேற்கொள்வது, ஆதார் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், கைரேகை பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சேவை மையம் நீண்ட காலமாக ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அலுவலக பழைய கட்டடத்தின் மாடியில் செயல்பட்டு வருவதால் வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் ஆதார் சேவை மையம் அமைந்துள்ள மேல் தளத்திற்கு சென்று வருவதில் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேல் தளத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தை தரை தளத்தில் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.