உத்தரகோசமங்கைக்கு கூடுதல் பஸ் வசதி தேவை நின்று கொண்டு பயணிக்கும் பக்தர்கள்
உத்தரகோசமங்கை: -பக்தர்கள் நின்று கொண்டு பயணிப்பதால் ராமநாதபுரத்தில் இருந்து உத்தரகோசமங்கைக்கு கூடுதல் பஸ்களை இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற சிவஸ்தலம். கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகின்றனர்.ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ.,ல் உள்ள உத்தரகோசமங்கைக்கு நேரடியான பஸ் வசதி இல்லாத நிலையில் சாயல்குடி, முதுகுளத்துார், தேரிருவேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் தான் உத்தரகோசமங்கைக்கு செல்கின்றன.இதனால் ராமநாதபுரத்தில் இருந்து உத்தரகோசமங்கைக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. உத்தரகோசமங்கை முன்னாள் ஊராட்சி தலைவர் உத்தண்டவேலு கூறியதாவது: ராமநாதபுரத்தில் இருந்து உத்தரகோசமங்கைக்கு டவுன் பஸ் வழித்தடம் எண்: 8 சென்று வந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. கோயிலில் நடக்கும் பூஜைகளில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். இரவு 8:00 மணிக்கு நடக்கும் அர்த்தஜாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜையில் பங்கேற்பதற்கு ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வருகின்றனர். எனவே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள்ஏற்கனவே இயங்கிய அரசு டவுன் பஸ்சை மீண்டும்குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவும், கூடுதல் பஸ் வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.