மழை இல்லாததால் ராமநாதபுரம் உப்பளங்களில் உற்பத்தி அதிகரிப்பு: ; தொடரும் வெயிலால் மலைபோல் உப்பு குவிப்பு
ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் உப்பளங்கள் அமைக்கப்பட்டு பிப்., முதல் ஆக., வரை உப்பு உற்பத்தி நடக்கிறது. அதன்பிறகு செப்., இறுதி வாரம் முதல் ஜனவரி மாதம் வரை உப்பு உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டில், மழை இல்லாதது காரணமாக தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருவதன் காரணமாக, உப்பளங்களில் உப்பு உற்பத்தி தொடர்ந்து நடக்கிறது. மாவட்டத்தில், தேவிபட்டினம், கோப்பேரிமடம், சம்பை, திருப்பாலைக்குடி, நதிப்பாலம், வாலிநோக்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள உப்பளங்களில் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விடங்களில் உற்பத்தி செய்யப்படும் முதல்தர உப்பு உணவு பொருள்கள் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு தோல் பதனிட்டுதல், கருவாடு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக மாவட்டத்தில் சீதோசன நிலை காரணமாக, செப்., இறுதி வாரம் முதல் ஜனவரி மாதம் வரை உப்பு உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டில், தற்போது வரை குறிப்பிடும் படியாக மழை பெய்யவில்லை. மாறாக தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருவதன் காரணமாக, உப்பளங்களில் உப்பு உற்பத்தி தொடர்ந்து நடக்கிறது. இதனால் வழக்கத்தை விட உப்பளங்களில் உப்புகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலர் அன் சீசனில் விற்பனை செய்வதற்காக மூட்டைகளில் சேகரித்துள்ளனர். ---