உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆறு வழிச்சாலை, 23 கண்மாய்கள் சீரமைப்பு ராமநாதபுரத்தில் 9 புதிய திட்டங்கள் முதல்வர் அறிவிப்பு

ஆறு வழிச்சாலை, 23 கண்மாய்கள் சீரமைப்பு ராமநாதபுரத்தில் 9 புதிய திட்டங்கள் முதல்வர் அறிவிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் தேசிய நெடுஞ்சாலை பகுதி 4 வழிச்சாலையில் இருந்து ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும். 23 கண்மாய் சீரமைப்பு உள்ளிட்ட ஒன்பது புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் ராமநாதபுரத்திற்கு வந்து அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். நேற்று காலையில் பேராவூர் திடலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முதல்வர் காலை 9:30மணிக்கு வந்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், பெரியகருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச டூவீலர்களை வழங்கினார். அதன்பிறகு ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, தோட்டக்கலைத் துறை திட்டபணிகள், மகளிர் குழுவினர் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். விழாவில் ரூ. 176 கோடியே 59 லட்சத்தில் 109 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.134 கோடியே 45 லட்சத்தில் 150 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள் சார்பில் 50 ஆயிரத்து 752 பேருக்கு ரூ.426 கோடியே 83 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். விழாவில் ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணா உட்பட பலர் பங்கேற்றனர். வரவேற்பு ராமநாதபுர வந்த முதல்வர் ஸ்டாலினை பார்த்திபனுார் எல்லையில் முதுகுளத்துார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,முருகவேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.உடன் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர். இதேபோன்று பரமக்குடி அருகே முதுகுளத்துார் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஒன்பது புதிய அறிவிப்புகள்

1 ராமநாதபுரம் நகராட்சியில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் நான்கு வழித் தடத்திலிருந்து ஆறு வழித் தடமாக ரூ. 30 கோடியில் மேம்படுத்தப்படும். 2 திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டங்களில் இருக்கின்ற 16 முக்கிய கண்மாய்கள் ரூ.18 கோடியில் மேம்படுத்தப்படும். 3 கீழக்கரை வட்டத்தில் இருக்கின்ற உத்தரகோசமங்கை, வித்தானுார் உள்ளிட்ட 6 கண்மாய்கள் ரூ.4 கோடியே 65 லட்சத்தில் மறு சீரமைக்கப்படும். 4 கடலாடி தாலுகா செல்வானுார் கண்மாய் ரூ.2.60 கோடி, சிக்கல் கண்மாய் ரூ. 2.30 கோடியில் மறு சீரமைக்கப்படும். 5 பரமக்குடி நகராட்சிக்கு ரூ.4.50 கோடியில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும். 6 ராமநாதபுரம் நகராட்சி பழைய பஸ்ஸ்டாண்ட் நவீன வணிக வளாகமாக மாற்றி அமைக்கப்படும். 7 ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லுாரியில் வசதிகளை மேம்படுத்தி, புதிய பாடப் பிரிவுகளை தொடங்கும் வகையில் ரூ.10 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டப்படும். 8 கீழக்கரை நகராட்சிக்கு ரூ. 3 கோடியில் புதிய அலுவலகக் கட்டடமும், ரூ.1.50 கோடியில் நவீன மீன் அங்காடியும் கட்டப்படும். 9 கமுதி விவசாயிகளின் நலன் கருதி 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும். இந்த ஒன்பது அறிவிப்புகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என முதல்வர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை