மிளகாய் நாற்று உற்பத்தி
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, சிலுகவயல், இருதயபுரம், சேத்திடல், சீவலாதி, வரவணி, செங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையை பயன்படுத்தி நிலத்தை உழுது மிளகாய் விதைப்பிற்கு ஏற்ற நிலையில் வைத்திருந்த வயல்களில் விவசாயிகள் மிளகாய் விதைகளை நேரடி விதைப்பு செய்தனர்.ஆண்டு தோறும் விவசாயிகள் வயல்களில் நேரடியாக மிளகாய் விதைகளை விதைப்பு செய்தாலும் நவ., டிச., மாதங்களில் பெய்யும் மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பெரும்பாலான மிளகாய் வயல்களில் முளைத்து வளர்ச்சி அடைந்த மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்படுவது தொடர்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் மேடான பகுதி, குளக்கரை, கண்மாய் கரைகளில் மிளகாய் விதைகளை மொத்தமாக துாவி மிளகாய் நாற்று உற்பத்தி செய்கின்றனர். மிளகாய் செடிகள் மழைக்காலங்களில் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்படும் போது மேடான பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய் நாற்றை பறித்து நடவு செய்ய முடியும். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது விவசாயிகள் மேடான பகுதியில் மிளகாய் நாற்று உற்பத்தி செய்யும் பணியை துவங்கி உள்ளனர்.