உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடல் வளம் காக்கும் கரைவலை மீன்பிடிப்பு; கைகொடுக்கும் தென்னை நார் கயிறு வலை

கடல் வளம் காக்கும் கரைவலை மீன்பிடிப்பு; கைகொடுக்கும் தென்னை நார் கயிறு வலை

சிக்கல்; மீன் பிடித்தலில் எத்தனையோ முறைகள் இருந்தாலும் கடலுக்கு மாசில்லாத தென்னை நார் கயிறுகளை பயன்படுத்தி கரைவலை இழுக்கும் தொழிலை மீனவர்கள் செய்து வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், முந்தல், மாரியூர், ஒப்பிலான், நரிப்பையூர் உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடற்கரையோரங்களில் கரைவலை மீன்பிடிப்பை பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.முதலில் கடற்கரையில் இருந்து கடலில் குறிப்பிட்ட தொலைவிற்கு சிறிய படகில் சென்று ஆங்கில 'யூ' வடிவில் கரைவலையை விரிப்பார்கள். பின்னர் வலையின் இரு புறமும் கயிறு கட்டி இரண்டு குழுக்களாக கரையில் நின்று ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் இணைந்து இழுக்கின்றனர்.ஓ வேலா! ஏ வேலா!! என நாட்டுப்புற பாடல்களை பாடியவாறு வலையை இழுக்கின்றனர். ஒரு வரிசைக்கு 30 பேர், மறு வரிசைக்கு 30 பேர் என 60 பேர் இப்பணியில் இருக்க வேண்டும். பின்னர் பிடிக்கின்ற மீன்களை மீனவர்கள் மூன்று பங்காக பிரித்துக் கொள்கின்றனர்.அதாவது வலைக்கும், படகுக்கும் ஒரு பங்கு மற்ற இரண்டு பங்குகளை எத்தனை பேர் கரை வலைகளை இழுக்கின்றார்களோ அத்தனை பேருக்கும் சமமாக பிரித்துக் கொள்கின்றனர்.மீனவர்கள் கூறியதாவது: பொதுவாக கரைவலை மீன்பிடிப்பிற்கு தென்னை நார் மூலம் பின்னப்பட்ட கொச்சை கயிறு 60 எண்ணிக்கையில் மொத்தமாக ஒருங்கிணைத்து சேர்த்து வைக்க வேண்டும். கடலுக்குள் 5 கி.மீ., தொலைவிற்கு கரைவலை மீன்பிடிப்பு செயல்பாடுகள் இருக்கும். இவற்றில் சிறிய ரக மீன்களுக்கு பதிலாக நடுத்தர மற்றும் பெரிய அளவிலான மீன்கள் பிடிபடுகிறது. வலையில் எதிர்பாராமல் சிக்கும் அரிய வகை உயிரினங்களான டால்பின், கடல் ஆமை, கடல் பசு ஆகிய உயிரினங்களை பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டு விடுகிறோம்.பொதுவாக பிளாஸ்டிக் கயிறுகளை இவற்றிற்கு பயன்படுத்துவது கிடையாது. பல ஆண்டுகளுக்கு உப்பு நீரிலும் நீடித்து உழைக்கக்கூடிய தன்மை கொண்டது தென்னை நார் கயிறுகள் ஆகும். மண்ணுக்கும், கடலுக்கும் இயற்கை சார்ந்த வலைகளின் தொழில் நுட்பமே சிறந்தது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை