மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் போட்டி
பெரியபட்டினம்; பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த அரிய கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் போட்டி மற்றும் பயிற்சி முகாம் முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.இதற்கு முன்பு அரசுப்பள்ளி மற்றும் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்குபுத்தாக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் 183 பள்ளிகளில் இருந்து 288 வழிகாட்டி ஆசிரியர்களும், 6382 மாணவர்களும் பங்கேற்றனர். மாவட்ட அளவில் மாணவர்கள் வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் 1218 மாணவர்களின் புதுமையான அறிவியல் சிந்தனைகளை உள்ளடக்கிய கண்டுபிடிப்புகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு மூன்று கட்டங்களாக மதிப்பீடு செய்யப்பட்டு தற்போது 18 பள்ளிகள் நான்காவது நிலைக்கு தேர்வு செய்யப்பட்டன. இரு நாட்கள் மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராஜீ தலைமை வகித்து துவக்கி வைத்தார். முதல்வர் சூசைநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வரவேற்றார்.மாவட்ட திட்ட மேலாளர் பொன் வேல்முருகன் திட்ட விளக்க உரையாற்றினார். இயற்பியல் பேராசிரியர் சத்யா நன்றி கூறினார்.யூனிசெப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.