டூவீலர் விபத்தில் பலியான மீனவரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம் நுகர்வோர் கோர்ட் உத்தரவு
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர் டூவீலர் விபத்தில் பலியானார். அவரது குடும்பத்திற்குரிய நிவாரணத்தை மீனவர் நலத்துறை வழங்காதது தொடர்பான வழக்கில் ரூ.5 லட்சம், சேவை குறைபாட்டிற்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. ராமேஸ்வரம் சேரான்கோட்டையைச் சேர்ந்த மீனவர் நாகசாமி 54. இவர் 2023 ஜூலை 1ல் வழுதுாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி பலியானார். அவரது இறப்பிற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க கோரி மனைவி பூங்கனி சேரான்கோட்டை மீனவர் நலச்சங்கத்தில் விண்ணப்பித்தார். விபத்தில் பலியாகி 90 நாட் களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் தாமதமாக விண்ணப்பித்ததாக கூறி அவரது விண்ணப்பத்தை மீன்வளத்துறை யினர் நிராகரித்தனர். இதனால் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் பூங்கனி, மகன் கதிரேசன் கடந்தாண்டு ஏப்.,17ல் மனு அளித்தனர். இதனை குறைதீர் கோர்ட் நீதிபதி பாலசுப்பிரமணியன், உறுப்பினர் குட்வின் சாலமோன் ராஜ் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு: இதில் விபத்து காப்பீடு கோரி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஆவணங்களை அனுப்ப வேண்டும். மாறாக 97 நாட்கள் கழித்து தான் மீன்வளத்துறையினர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஆவணங்களை அனுப்புதற்கு 180 நாட்கள் காலஅவகாசம் இருந்த நிலையில் உரிய காலத்தில் அனுப்பாததால் விபத்து காப்பீடு இன்சூரன்ஸ் பெறமுடியவில்லை. எனவே விபத்தில் பலியான மீனவரின் குடும்பத்திற்கு பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் முறையான சேவை வழங்காத மீனவர் நலத்துறை ஆணையர், ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் இணைந்து ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மேற்கண்ட தொகையை 2 மாதங் களுக்குள் வழங்கவில்லை எனில் ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்றனர்.