தங்கச்சிமடத்தில் தார் சாலைக்கு ஆபத்தான முறையில் கலவை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் தார் சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் காஸ் சிலிண்டர் அடுப்பு மூலம் தார், ஜல்லி கலவை தயாரித்தனர்.தங்கச்சிமடம் ஊராட்சியில் உள்ள வலசை தெருவில் புதிய தார் சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியது. புதிய சாலைக்கு தேவையான தார், ஜல்லி கலவை இயந்திரத்தை ஊருக்கு வெளிப்புறத்தில் மக்கள் வசிக்காத பகுதியில் தயாரித்து புதிய சாலை பகுதியில் கொட்டுவது வழக்கம்.ஆனால் தங்கச்சிமடம் மங்கள தீர்த்தம் அருகில் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் காஸ் சிலிண்டர் அடுப்பு மூலம் இயந்திரத்தில் தார், ஜல்லி கலந்த கலவையை தயாரித்து டிராக்டரில் எடுத்துச் சென்று புதிய சாலை பகுதியில் கொட்டினர்.விதிமீறி சாலை ஓரத்தில் நடந்த தார்சாலை கலவை இயந்திரத்தால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதித்து வெப்ப சலனம் பரவியது. சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் தார், ஜல்லி கலவையால் மேலும் வலுவடைந்த வெப்ப சலனத்தில் வாகன ஓட்டிகள் பீதியுடன் கடந்து சென்றனர்.எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி ஆபத்தான முறையில் தார், ஜல்லி கலவை தயாரித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.