அலைகள் திட்டத்தில் 200 மீனவ மகளிர் குழுக்கள் அமைக்க முடிவு
தொண்டி: அலைகள் திட்டத்தில் கடலோர கிராமங்களில் 200 மீனவ மகளிர் குழுக்கள் அமைக்கும் பணிகள் நடக்கிறது.மீனவ மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்கு கடன் வழங்க வசதியாக அலைகள் திட்டம் என்ற திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தொண்டி மீன்வளத்துறையினர் கூறியதாவது:காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் கடலோர மீனவ கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ராமநாதபுரம் (வடக்கு) ஆற்றங்கரை முதல் தேவிபட்டினம், தொண்டி வரை 200 மகளிர் குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டம் மூலம் மீனவ மகளிர் நுண்கடன் பெற்று தங்கள் தொழிலை மேம்படுத்திக் கொள்ளமுடியும். அலைகள் திட்டம் மூலமாக மீனவ மகளிரின் பொருளாதாரம் மேம்படவும், அவர்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்பாக அமையும்.எஸ்.பி.பட்டினம், புதுப்பட்டினம், தொண்டி, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, முள்ளிமுனை, காரங்காடு உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களில் இத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மீனவ பெண்கள் கூட்டம் நடத்தப்பட்டு குழுக்கள் அமைக்க அறிவுரை வழங்கப்படுகிறது என்றனர்.