பணி ஒதுக்க பஸ் ஊழியர்களிடம் லஞ்சம் தி.மு.க., நிர்வாகி ஆடியோவால் அம்பலம்
துாத்துக்குடி:தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக, துாத்துக்குடி புறநகர் கிளை எட்டையபுரம் சாலையில் உள்ளது. அங்கு பணிபுரியும் டிரைவர், கன்டக்டர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, ஆளுங்கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் அதிகாரிகள் உடந்தையோடு பணி ஒதுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தி.மு.க., தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கிளைச்செயலராக இருக்கும் சந்திரசேகரன், உடல்நிலை பாதிக்கப்பட்ட டிரைவர் ஒருவரிடம் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.ஆடியோவில் டிரைவர் ஒருவரிடம் அவர் பேசியதாவது:மினிட்ஸ் செட்யூல் தயார் செய்துவிட்டோம். உங்களுக்கு வேறு எந்த ரூட்டும் ஒதுக்க முடியாது. யாரை வேண்டுமானும் பார்த்துக்கொள். நீங்கள், 5,000 ரூபாய் வழங்கியது உண்மை. அது ஒருநாள் செலவுக்குக் கூட காணாது. பணம் வாங்கிவிட்டதால் எனக்கு பணி ஒதுக்க வேண்டும் என, பொதுமேலாளரிடம் புகார் அளித்துள்ளீர்கள்.கோடிக்கணக்கில் அடிப்பவர்களை விட்டுவிட்டு, 5,000 ரூபாய் கொடுத்துவிட்டு என்னை பற்றி வெளியே கூறியுள்ளாய். ஆளுங்கட்சியா? நீயா? என பார்த்துக் கொள்வோம். உன்னை அறுத்து விடுவேன். இரக்கப்பட்டு பணி ஒதுக்கினேன். உனக்கு சேலம், கோவை ஒதுக்க முடியாது. எம்.டி., என, யாரிடமும் புகார் அளித்துக்கொள்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.இதற்கிடையே, பாதிக்கப்பட்ட டிரைவர் தரப்பில் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.தமிழகம் முழுதும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்துதான், டிரைவர், கண்டக்டர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்படுவதாக நீண்ட காலமாக எழுந்து வரும் புகார்களை, இந்த சம்பவம் அம்பலப்படுத்தி உள்ளது.