| ADDED : டிச 10, 2025 08:55 AM
ராமநாதபுரம்: நீதிமன்றங்களில் இணைய வழியில் வழக்குகளை பதிவு செய்யும் இ--பைலிங் முறையை கைவிடக் கோரி ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் அன்புச்செழியன் தலைமை வகித்தார்.மூத்த வழக்கறிஞர் குணசேகரன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசியதாவது: ஜாக் கூட்டமைப்பு அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடக்கிறது. இ--பைலிங் முறையில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்திற்கு இந்த நடைமுறை பொருந்தும். மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் இ--பைலிங் செய்வதற்கு போதிய கட்டமைப்பு வசதி இல்லை. இதனால் இளம் வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீதிமன்றத்தில் இணைய வசதி, போதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தும் வரை இந்த நடைமுறையை கைவிட வேண்டும் என்றார். மூத்த வழக்கறிஞர் முகம்மது சுல்தான், மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் முத்து துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ராமேஸ்வரம், முதுகுளத்துார், கடலாடி, பரமக்குடி, கமுதி பகுதியை சேர்ந்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.