ஆனந்துார் பகுதி விவசாயிகள் கவலை
ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான திருத்தேர்வளை, சாத்தனுார், துவார், ஆய்ங்குடி, கூடலுார், நத்தக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் 20 நாட்களுக்கு முன்பு நெல் விதைப்பு செய்யப்பட்டது. பருவ மழையை எதிர்பார்த்து நெல் விதைப்பு செய்யப்பட்ட நிலையில் பருவமழை ஏமாற்றத்தால் விதைத்த விதைகள் முளைப்பதற்கு ஈரப்பதம் இன்றி விதைகள் முளைப்பு திறனை இழந்து வருகின்றன. சில பகுதிகளில் வயல்களில் உள்ள விதை நெற்களை கவுதாரி, மயில் உள்ளிட்ட பறவைகள் இரைகளாகின்றன. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் சில நாட்களுக்கு பருவமழை கை கொடுக்காவிட்டால் மீண்டும் நெல் விதைப்பு செய்து உழவு செய்ய வேண்டிய கட்டாயம் அப்பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதலாக ஏக்கருக்கு ரூ.3000 முதல் ரூ.5000 வரை செலவு ஏற்படும் என கவலை தெரிவித்தனர்.