உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆக்கிரமிப்பை அகற்றி கண்மாயை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்

ஆக்கிரமிப்பை அகற்றி கண்மாயை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வைகை ஆறு நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பெரிய கண்மாயை துார்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.கூட்டத்திற்கு ஆர்.டி.ஒ., ராஜமனோகரன் தலைமை வகித்தார். குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன், ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குநர் அம்பேத்குமார், பொதுப்பணித்துறை நீர்வளம் உதவிப்பொறியாளர் சின்னமுத்து ராமர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் பேசியதாவது: பாலகிருஷ்ணன், சோழந்துார்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் மூலம் 72 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. தமிழகத்தின் 2வது பெரிய கண்மாயாக உள்ளதால் அதனை அணைக்கட்டமாக மாற்ற வேண்டும் மதுரைவீரன், மதுரை மண்டல தலைவர், வைகை பாசன விவசாயிகள் சங்கம்: வைகை ஆற்றுநீரை முழுமையாக பயன்படுத்த இடது, வலது பிரதான கால்வாய்களை துார்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பேச்சிமுத்து, தலைவர், ராமநாதபுரம் தாலுகா விவசாயிகள் சங்கம் : திருப்புல்லாணி ஒன்றியம் தென்னை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய உரத்தை கூடுதல் விலைக்கு விற்றுள்ளனர். மேலும் பெரிய கண்மாய், சக்கரகோட்டை கண்மாய் நிரம்பி உபரிநீர் சேதுக்கரை கடலில் கலப்பதை தடுத்து திருப்புல்லாணிக்கு செல்லும் வகையில் புதிய வாய்க்கால் அமைக்க வேண்டும். பெரியகண்மாயை துார்வார வேண்டும்.மகாதேவன், முதுனால்: பெரியகண்மாய் தண்ணீர் மூலம் 2ம் போகம் நெல் சாகுபடி நடக்கிறது. மாடுகள் பயிர்களை சேதப்படுத்துகிறது. அதனை கட்டுப்படுத்த வேண்டும். வருவாய் கோட்ட அளவிலான குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் சிலர் தான் வந்துள்ளனர். எனவே ஒருவாரத்திற்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும்.மாடுகள், காட்டுபன்றிகள் பயிர்களை சேதப்படுத்தாத வகையில் வனவிலங்கு விரட்டி மருந்து விற்கப்படுகிறது. அதை வாங்கி விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என வேளாண் அறிவியல் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறினார்.கண்மாய், வரத்துவாய்க்கால்களை துார்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஒ., தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை