கமுதியில் கம்பு பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் கவலை
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கோட்டைபட்டி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கம்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கமுதி அருகே செங்கோட்டைபட்டி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கரும்பு, கம்பு, சோளம், குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். சிறுதானியப் பயிர்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானதால் பயிர்கள் நன்கு வளர்ச்சியடைந்திருந்தது. செங்கோட்டைபட்டி கிராமத்தில் பயிரிடப்பட்டுஉள்ள கம்பு பயிர்களை காட்டுப்பன்றி சேதப்படுத்தியது. அப்பகுதியைசேர்ந்த விவசாயி அய்யனார் கூறியதாவது:கமுதி அருகே செங்கோட்டைபட்டி கிராமத்தில் கம்பு பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போது காட்டுப்பன்றிகள் முழுமையாக சேதப்படுத்தியதால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கமுதி வட்டாரத்தில்காட்டுப்பன்றிகள் தொல்லை தொடர்ந்து இருப்பதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரமக்குடி அருகே முத்துராமலிங்கபுரம் பட்டி கிராமத்தில் காட்டுப்பன்றிகள் கடித்து 3 விவசாயிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளனர்.