சாரல் மழையால் 2 நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு விவசாயிகள் கவலை
ஆர்.எஸ்.மங்கலம்: கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தாலும், கண்மாய் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கும் மேலாக, மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஆர்.எஸ். மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பகல், இரவு என தொடர்ந்து சாரல் மழை பெய்கிறது. கனமழையின்றி சாரல் மழை துாறலாக பெய்து வருவதால் பொதுமக்களும், வர்த்தகர்களும் வெளியில் செல்லும் போது கடுமையாக பாதிப்படைகின்றனர். மேலும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுஉள்ள நெற்பயிர்களுக்கு தற்போது பெய்து வரும் சாரல் மழை, தண்ணீர் தேங்கும் அளவிற்கு ஏற்றதாக அமையவில்லை என்ற கவலையும் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தும் நெல் வயல்கள், கண்மாய், குளங்களில் போதிய நீர்மட்டம் உயராததால் நெல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.