பரமக்குடி நகரில் குவியும் குப்பை சுகாதாரக்கேட்டால் மக்கள் பாதிப்பு
பரமக்குடி : பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பை மற்றும் பொது மக்கள் கண்ட இடங்களில் கொட்டுவதால் சுகாதாரக் கேடு அதிகரித்துள்ளது.பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளை உள்ளடக்கி 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன், மதுரை - ராமேஸ்வரம் ரோடு, வைகை ஆறு, எமனேஸ்வரம் பகுதியை உள்ளடக்கி குறுகிய இடத்தில் நகர் கட்டமைக்கப்பட்டுள்ளது.நகராட்சி அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு வீடுகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பை என துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரித்த கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் வீடு, கடைகளை காலி செய்வோர், விசேஷ நாட்கள் என தங்கும் குப்பையை வைகை ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை கொட்டுவதுடன், ஆங்காங்கே கழிவு நீர் வாய்க்கால் கரைகளிலும் விட்டுச் செல்கின்றனர்.மேலும் நகராட்சி துாய்மை பணியாளர்கள் எடுத்துச் செல்லும் குப்பை வைகை ஆற்றங்கரைகளில் கொட்டும் நிலை அதிகரித்துள்ளது. சுகாதாரக்கேட்டால் நோய்தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பையை முறையாக நகராட்சி பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். இதேபோல் நகரில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பையை முறையாக குப்பைக்கிடங்குகளில் சேகரித்து தரம் பிரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.