தரமற்ற பேவர் பிளாக் ரோட்டால் அவதி அரசு நிதி வீணடிப்பு
சாயல்குடி: சாயல்குடி அருகே எஸ்.வாகைக்குளம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாயை மூடிவிட்டு அதே இடத்தில் தரமற்ற பேவர் பிளாக் ரோடு அமைத்ததைகண்டித்து சாயல்குடி நகரின் பல்வேறு இடங்களில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.எஸ்.வாகைகுளம் ஊராட்சியில் 4000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு வாகைக்குளம் கிராமத்தில் கழிவு நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கழிவுநீர் கால்வாய் சென்ற இடத்தில் பேவர் பிளாக் கற்கள் வைத்தும் தரமற்ற முறையில் அமைத்ததால் சமீபத்தில் பெய்த மழை நீருடன் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கி குளம் போல உள்ளது.எஸ்.வாகைக்குளம் கிராம மக்கள் கூறியதாவது: வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்ற ரூ.3.50 லட்சத்தில் வடிகால் அமைக்கப்பட்டது. கழிவு நீர் கால்வாய் செல்லும் பகுதியை மூடிவிட்டு தரமற்ற முறையில் பேவர் பிளாக் கற்களை பதித்துள்ளனர். இதனால் தெருக்களில் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்ல வழியின்றி குளம் போல் தேங்கியுள்ளது. அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது குறித்து கடலாடி யூனியன் அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளோம். எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க பேவர் பிளாக் ரோட்டை முறையாக பராமரிப்பு செய்து கழிவுநீர் செல்வதற்கும் வழி ஏற்படுத்த வேண்டும் என்றார்.