உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பராமரிப்பற்ற தடுப்பணைகளால் அரசுக்கு.. நிதி இழப்பு : சேதுக்கரை கடலில் வீணாகும் ஆற்று நீர்

பராமரிப்பற்ற தடுப்பணைகளால் அரசுக்கு.. நிதி இழப்பு : சேதுக்கரை கடலில் வீணாகும் ஆற்று நீர்

திருப்புல்லாணி: ராமநாதபுரம் மாவட்டத்தில் பராமரிப்பில்லாத தடுப்பணைகளால் அரசு நிதி வீணடிக்கப்பட்டு கொட்டக்குடி ஆற்றின் வழியாக சேதுக்கரை கடலில் மழைநீர் வீணாகிறது. திருப்புல்லாணி அருகே 15 கி.மீ., சுற்றளவில் பாயும் கொட்டகுடி ஆறு கோரைக்குட்டம் வழியாக கடலும் ஆறும் சங்கமிக்கும் முகத்துவாரம் வழியாக சேதுக்கரை கடலில் கலக்கிறது. ஒரு வாரமாக பெய்த கனமழையால் உத்தரகோசமங்கை, களரி, கருக்காத்தி, மேலமடை, குளபதம், வைகை, மோர்க்குளம் வழியாக கீழக்கரை அருகே உள்ள தோணி பாலத்தின் வழியாக வெள்ள நீர் கடலில் கலக்கிறது. விவசாயிகள் கூறியதாவது: கடந்த 2019ம் ஆண்டு முதல் பெருவாரியான தடுப்பணைகள் குறிப்பிட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ளன. அவற்றை முறையாக பராமரிக்காததாலும், பெரும்பாலான தடுப்பணைகள் இடிந்து சேதம் அடைந்ததாலும் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவ மழைக் காலங்களிலும் மழை நீர் வெள்ளமாக பாய்ந்து கொட்டகுடி ஆற்றின் வழியாக கடலில் கலப்பதால் அவற்றை முறையாக கண்மாய்க்கு மடை திருப்பி கண்மாயை நிரப்புவதற்கான வழித்தடங்கள் துார்ந்து போய் உள்ளன. பொதுப்பணித்துறை பாசன கன்மாய் அதிகாரிகளும், ஒன்றிய பாசன அலுவலர்களும் இவ்விஷயத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்கின்றனர். தண்ணீர் விவசாயத்திற்கும் பயன்படாமல் வீணாக கடலுக்குச் செல்கிறது. சிறு மழை பெய்தால் கூட அவற்றை சேகரிக்க இயலவில்லை. வரக்கூடிய பருவமழையை எதிர்கொள்வதற்கு முன்பு கோடை காலத்தில் நீர்வழித்தடங்களை முறையாக துார்வார வேண்டும். கரைப்பகுதி பலமிழந்து உள்ளது. தனி நபர்களின் ஆக்கிரமிப்பால் கண்மாய் வரத்துகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இவ்விஷயத்தில் மாவட்டம் நிர்வாகம் கடலுக்கு வீணாக செல்லும் ஆற்று நீரை உரிய முறையில் விவசாயத்திற்கும், நீர் நிலைகளில் நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விஷயத்தில் பலமுறை எடுத்துச் சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே எதிரொலிக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை