ரிபேட் வராமல் கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் பரிதவிப்பு : காசுக்கடன் வழங்குவதில் மத்திய கூட்டுறவு வங்கி பாரபட்சம்
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு ரூ. 15 கோடி அளவில் ரிபேட் பாக்கி வழங்காமல் உள்ளனர். மத்திய கூட்டுறவு வங்கியில் காசு கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதால் சங்கங்கள் பரிதவிப்பில் உள்ளன. பரமக்குடி சரகத்தில் 80க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், பல ஆயிரம் பேர் கச்சா பொருட்களை பெற்று நெசவுத் தொழில் புரிகின்றனர். இதன் மூலம் கூலி உள்ளிட்ட அனைத்து பலன்களையும் அடைகின்றனர். அரசு ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் விற்பனைக்கு ஏற்ப ரிபேட் வழங்குகிறது. இதன்படி 2024 ஜன., தொடங்கி 2025 ஆக., வரை என ரூ. 15 கோடி அளவில் ரிபேட் வர வேண்டி உள்ளது. ஆனால் கடந்த மாதம் 2025 ஜன., பிப்., மார்ச் ஆகிய 3 மாதங்களுக்கான ரிபேட் தொகை ரூ.3கோடியே 14 லட்சம் ரூபாய் விடுவித்துள்ளது. இச்சூழலில் ஒவ்வொரு சங்கமும் மத்திய கூட்டுறவு வங்கியில் உற்பத்திக்கு ஏற்ப காசு கடனை பெறுகின்றனர். இந்த வங்கிகளில் ஒரு சங்கம் ரூ.10 லட்சம் கடன் பெற தகுதி பெரும் சூழலில் பாதி அளவு வழங்கப்படுகிறது. இதனால் கச்சா பொருட்களை வாங்குவதில் தொடங்கி, கூலி கொடுப்பது என பல்வேறு சிரமங்களை சங்கத்தினர் சந்திக்கின்றனர். இது குறித்து பரமக்குடி எமனேஸ்வரம் அனைத்து கைத்தறி நெசவாளர் சொசைட்டிகளின் உறுப்பினர்களின் பெடரேஷன் செயலாளர் கோதண்டராமன் கூறியபோது: அரசு வழங்க வேண்டிய ரிபேட் நிலுவைத் தொகையை அந்தந்த காலங்களில் வழங்க வேண்டும். இதனை வழங்காமல் உள்ளதால் காசு கடன் பெற்ற வங்கிக்கு கடனை திரும்ப செலுத்த முடியாமல் கூடுதல் வட்டி செலுத்தும் சூழல் உண்டாகிறது. ஆகவே சங்கங்கள் முறையாக இயங்க ரிபேட் பாக்கியை காலாண்டுக்கு ஒரு முறை வழங்குவதுடன், காசு கடன் வட்டியை வங்கிகள் பாரபட்சமின்றி வழங்க வேண்டும், என்றார்.