UPDATED : டிச 04, 2025 04:58 AM | ADDED : டிச 04, 2025 04:57 AM
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் ரோடு துண்டிக்கப்பட்டு தரைபாலத்தில் பல அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மல்லனுார் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் சில நாட்களாக திருவாடானை, தொண்டி பகுதியில் பலத்த மழை பெய்தது. இரு நாட்களாக மழை பெய்வது நின்று வெயிலின் தாக்கம் இருந்தது.இந்நிலையில் நேற்று அதிகாலை 12:00 மணிக்கு மேல் பலத்த மழை பெய்யத் துவங்கியது. இதில் திருவாடானையிலிருந்து ஓரியூர் செல்லும் சாலையில் நகரிகாத்தான் தரைபாலத்தில் பல அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பாலத்தை உயர்த்தி கட்டும் பணி சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இதில் வாகனங்கள் செல்லும் வகையில் பக்கவாட்டு சாலை அமைக்கப்பட்டது.மழையால் இந்த சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பாண்டுகுடி, வெள்ளையபுரம், ஓரியூர் மக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்பகுதி மாணவர்கள் வெளியூர் பள்ளிகளில் படிக்கின்றனர்.போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மல்லனுார் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. எட்டுகுடி- மல்லனுார், கொடிப்பங்கு- மல்லனுார் தரைப்பாலங்களில் வெள்ளம் செல்வதால் அக்கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொண்டியில் தெற்கு தோப்பு, அனிஷ் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழையால் வீடுகளுக்குள் நீர் புகுந்தது. மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் தொண்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.மங்களக்குடி அருகே சம்பாநெட்டியை சேர்ந்த வேதமாணிக்கம், ஜெயசீலன், தேளூரை சேர்ந்த லிங்கமுத்து, அச்சங்குடி தேவதாஸ் ஆகியோருக்கு சொந்தமான ஓட்டு வீடுகள் இடிந்தன.வருவாய்த்துறையினர் பார்வையிட்டு நிவாரண உதவி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.