பொதுத்தேர்விற்கு முன்பாகவே புத்தகத்திருவிழா நடத்த வலியுறுத்தல் ! அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்
ராமநாதபுரம்: தேனி, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை போன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் அனைத்து தரப்பு மாணவர்களும் பங்கேற்கும் வகையில் அதாவது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்விற்கு முன்பாகவே புத்தகத் திருவிழாவை நடத்த நுாலகம், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என புத்தக வாசிப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.புத்தக திருவிழாவை பொறுத்தமட்டில் பொதுமக்கள் பங்களிப்பை காட்டிலும் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது. புத்தகத் திருவிழா நாட்களில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அழைத்து வரப்படுவதால் அவர்கள் புத்தக வாசிப்பின் அவசியத்தை அறிந்து கொள்கின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 7வது புத்தக திருவிழா கடந்த மார்ச் 21 முதல் 30 வரை நடத்தப்பட்டது. அப்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு காரணமாக ஆசிரியர்கள், மாணவர்களின் பங்களிப்பு குறைவாக இருந்தது. திண்டுக்கல் செப்.,ல், விருதுநகரில் நவ.,ல் முடிந்து விட்டது. தேனியில் டிச.,28 வரை புத்தக திருவிழா நடக்கிறது. சென்னையில் புத்தகக் கண்காட்சி டிச.,27 முதல் 2026 ஜனவரி 12 வரை நடைபெற உள்ளது. இதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் அனைத்து தரப்பு மாணவர்களும் பங்கேற்கும் வகையில் புத்தகத் திருவிழாவை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்விற்கு முன்பாகவே அதாவது 2026 ஜன., மாதத்திலேயே புத்தக நடத்த பள்ளிக் கல்வித்துறை, நுாலகத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என புத்தக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா நடத்துவது தொடர்பாக கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அரசு பொதுத்தேர்வுகள் மட்டுமின்றி சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளதால் அதற்கு முன்பாகவே 8 வது புத்தக திருவிழா ஜன., அல்லது பிப்., முதல் வாரத்திற்குள் நடத்தப்பட உள்ளது என்றனர்.