வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் வண்டி வாடகையை வழங்க வலியுறுத்தல்
ராமநாதபுரம்:'வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டத்தில், ஒரு கார்டுக்கு 40 ரூபாய் தருகின்றனர்; இத்தொகை போதுமானதாக இல்லை. 'வண்டி வாடகை, எடையாளர் கூலிக்கு கூடுதல் செலவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட கடையின் கூட்டுறவு சங்கமே, வண்டி வாடகை வழங்க அரசு உத்தரவிட வேண்டும்' என, விற்பனையாளர்கள் வலியுறுத்தினர். தமிழகத்தில் தாயுமானவர் திட்டம் மூலம், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம் துவங்கி உள்ளது. இதில், ஒரு ரேஷன் கார்டுக்கு ஊரக பகுதிக்கு 40 ரூபாய், நகர் பகுதிக்கு 36 ரூபாய், மலைப்பகுதிகளுக்கு 100 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியிலும், 20 முதல் 30 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாதத்தின் இரண்டாவது சனி, ஞாயிறன்று, அவர்களின் வீடுகளுக்கு சென்று, பொருட்களை ரேஷன் ஊழியர்கள் வழங்குகின்றனர். கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு செல்லும் போது, வண்டி வாடகையாக 2,000 முதல் 3,000 ரூபாய் வரை செலவாகிறது. இது போக எடையாளர் கூலி என, விற்பனையாளர்கள் தங்களின் சொந்த பணத்தை செலவழிக்கும் நிலை ஏற்பட்டுஉள்ளது. இது குறித்து ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூறுகையில், 'வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்க, கடையை அடைத்து விட்டு செல்கிறோம். இதனால், அப்போது கடைக்கு பொருட்கள் வாங்க வருவோர் ஏமாற்றம் அடைகின்றனர். பயனாளிகளின் வீடுகள் ஒரே இடத்தில் இருப்பது இல்லை. 'இதன் காரணமாக, வண்டி வாடகை செலவு அதிகமாகிறது. எனவே, அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் வண்டி ஏற்பாடு செய்து, அவர்களே வாடகையை செலுத்த வேண்டும். அதற்கு உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.