ராமேஸ்வரம்: ''காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரங்களாக விளங்குகின்றன. இந்திய தேசம் குறித்து மகாகவி பாரதியார் கண்ட கனவு பிரதமர் மோடியின், 'காசி தமிழ் சங்கமம்' மூலம் நிறைவேறியுள்ளது,'' என, ராமேஸ்வரத்தில் நடந்த, 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிறைவு விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழகத்திற்கும், காசிக்கும் உள்ள கலாசார தொடர்பை வலியுறுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம் விழா நடத்தப்படுகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.0 விழா, டிச., 2 முதல் 15 வரை நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.நிறைவு விழா
இதன் நிறைவு விழா, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் ராமேஸ்வரத்தில் நேற்று நடந்தது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக கவர்னர் ரவி, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்த தேசம் வாழ்க என சொல்வதால், நாம் தமிழுக்கு எதிரானவர்களாக மாட்டோம். தொன்மையான காசி நகரமும், உலகின் தொன்மையான தமிழ் மொழியும் இணைவது காசி தமிழ் சங்கமம் என பிரதமர் மோடி தெரிவித்தார். காசியும், ராமேஸ்வரமும் பிரிக்க முடியாத புண்ணிய நகரங்கள். அதனால் தான் காசி தமிழ் சங்கமம் 4.0, காசியில் துவங்கி ராமேஸ்வரத்தில் முடிகிறது. உலகின் ஆன்மிக தலைநகரான காசி, பாரதத்தின் பண்பாட்டு மையமாக உள்ளது. தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கும் தலத்தில், கபீரின் பக்தி பாடல்களும் ஒலிக்கின்றன.மகாகவி பாரதி
முகலாய மன்னர்கள் காசி கோவிலை அழித்த போது, தமிழகத்தில் இருந்தும், பாண்டிய நாட்டில் இருந்தும் காசியை காக்க போர் புரிய சென்றனர். நாட்டின் தன்மானத்திற்கும், தர்மத்திற்கும் பாதிப்பு வரும் போது அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். எட்டயபுரத்தில் இருந்து சென்ற மகாகவி பாரதி, காசி அரசவையை அலங்கரித்துள்ளார். அவர் தேசத்தை பற்றி மட்டும் சிந்தித்துள்ளார். இந்திய தேசம் குறித்து பாரதியார் கண்ட கனவு, பிரதமர் மோடி மூலம் நிறைவேறி வருகிறது.அரசின் எந்த திட்டமாக இருந்தாலும் தமிழனின் பெருமையையும், இந்தியாவின் பெருமையையும் நிலைநாட்டும் வகையில் உள்ளது. தமிழ் கலாசாரம் குறித்து மக்களின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். கவர்னர் ரவி தமிழில் பேசியதை கேட்டபோது, நானும் ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு வந்தது. தமிழகத்தில் யார் சொத்துக்கும் ஆசைப்படாத சூழல் வர வேண்டும். உலகின் உன்னத நிலைக்கு நம் பாரதம் வர வேண்டும். பாரத தேசத்தின் உச்சத்தை தமிழகமும் தொட வேண்டும்.எந்த இடத்தில் இருந் தாலும் அகங்காரம் கொண்டவராக இல்லாமல், மக்களில் ஒருவராக, உங்களில் ஒருவராக இருப்பேன். இன்றைக்கும், என்றைக்கும் பாரத தேசம் ஒன்று தான்.இவ்வாறு அவர் பேசினார்.மூவேந்தராக மோடி
பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கலாசாரம், பண்பாட்டில் காசியும், தமிழகமும் சிறந்து விளங்குகின்றன. இனிமை, அமுது, பால் என எல்லாமே தமிழாக நினைக்கும் தமிழகத்தில், தமிழை யாரும் முன்னிறுத்துவதில்லை. பிரதமர் மோடி அயோத்தியிலும், ஐ.நா., சபையிலும் தமிழை முன்னிறுத்தியுள்ளார். பாண்டிய மன்னன் காலத்தில், தமிழுக்காக மதுரையில் தமிழ் சங்கம் நடத்தப்பட்டது.தமிழை முன்னிறுத்தி, பாண்டிய மன்னனாக பிரதமர் மோடி விளங்குகிறார். கங்கை கொண்ட சோழபுரத்தை உலகிற்கு அடையாளம் காட்டினார். பாண்டிய மன்னனாக, சேர சோழ மன்னர்கள் போன்று இந்திய நாட்டின் மூவேந்தராக மோடி விளங்குகிறார். தமிழ் மொழியானது சீர், அடி, தொடை என இலக்கண கட்டுப்பாட்டுடன் உள்ளதால் சாகாவரம் பெற்று உள்ளது.எல்லா மாநிலங்களிலும் தமிழ் கற்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார். உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழரும் பிரதமர் மோடியை புகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வாரணாசி மாணவர்கள் நெகிழ்ச்சி
வாரணாசியில் இருந்து தமிழகம் வந்து, தமிழ் மொழி கற்ற மாணவர்கள் மித்ருன்ஜெ குமார் சிங், அகன்ஷா சிங் ஆகியோர் கூறியதாவது: வாரணாசியில் இருந்து தமிழகம் வந்து 10 நாட்களில் தமிழ் மொழியில், 'எப்படி இருக்கீங்க, வணக்கம், நன்றி' என்ற வார்த்தைகளை தெரிந்து கொண்டோம். தமிழகத்தின்உணவுமுறை நன்றாக இருந்தது. பழமையான தமிழ் மொழி கற்றதில் பெருமை. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், சொற்கள் தெரிந்தபின் ஆர்வமுடன் தமிழ் கற்றோம். தமிழ் சொற்கள், அடிப்படை வார்த்தைகளை கற்றுக் கொண்டோம் நன்றி. இவ்வாறு கூறினர்.