கார்-மினி லாரி நேருக்கு நேர் மோதியதில் தாய், மகன் பலி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே கருங்குளம் பகுதியில் மதுரை கே.கே.நகரில் இருந்து வந்த காரும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதியதில் தாயும், மகனும் பலியாகினர்.மதுரை கே.கே.நகரை சேர்ந்த கருணாநிதி மகன் வாசுதேவன் 40. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர் மனைவி அனிதா 34, மகன்கள் கனிஷ்கர் 13, அருள்மொழி வர்மன் 14, ஆகியோருடன் காரில் அழகன்குளத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அனிதாவின் தந்தையை பார்க்க வந்தனர். வாசுதேவன் காரை ஓட்டி வந்த போது மதியம் 2:00 மணிக்கு மற்றொரு வாகனத்தை முந்த முயன்ற போது எதிரில் செங்கல் ஏற்றி வந்த மினி லாரியில் மோதி காரில் பயணித்த அனைவரும் காயமடைந்தனர்.இவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அனிதா, அருள்மொழி வர்மன் பலியாகினர். வாசுதேவன், கனிஷ்கர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மினி லாரி டிரைவர் மதுரை நென்மேனி பாண்டி மகன் மதுரை வீரன் 26, காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரும், மினி லாரியும் மோதி நின்ற போது பின்னால் வந்த மற்றொரு கார் மினி லாரியில் மோதியது. இதில் ஒருவர் லேசான காயமுற்றார். ராமநாதபுரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.