சேதமடைந்த நிலையில் உள்ள ஊருணி புதிய படிக்கட்டுகள்
கடலாடி : கடலாடி ஒன்றியத்தில் பல ஊராட்சிகளில் கடந்த மூன்று மாதங்களில் அதிகளவு குளங்கள் மற்றும் ஊருணிகளில் படித்துறைகளுக்கான படிக்கட்டுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த ஓராண்டிற்கு முன்பு கட்டப்பட்ட படித்துறைகள் பல இடங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் 15வது நிதிக்குழு நிதியில் ஊருணியில் படித்துறை கட்டுவதில் அதிகளவு ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரூ.3 லட்சம் முதல் 4.50 லட்சம் வரை மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு படித்துறை அமைக்கப் படுகிறது. இங்கு பெரியபள்ளம் உள்ளதை அறியாமல் குளத்தில் குளிப்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். படித்துறையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளாமல் ஒன்றிய பொறியாளர்களும் மவுனம் சாதித்து வருகின்றனர். எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க தேவையான இடங்களில் தரமான படிக்கட்டுகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.