உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நவ.20க்குள் பாம்பன் புதிய பாலம்; பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

நவ.20க்குள் பாம்பன் புதிய பாலம்; பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை, பிரதமர் மோடி நவ.,20க்குள் திறந்து வைக்க இருக்கிறார். பாம்பன் கடலில், 550கோடி ரூபாயில் அமைத்த புதிய ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளும், பாலத்தின் நடுவில் ஆசியாவிலேயே முதல் முறையாக, கடலில் அமைக்கப்பட்ட 'லிப்ட்' முறையிலான துாக்கு பாலம் பொருத்தும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இரு கட்டமாக, பாலத்தில் காலி சரக்கு ரயில் பெட்டிகள் சோதனை ஓட்டம், துாக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனையும் நடத்தப்பட்டது. இச்சோதனைகள் வெற்றி பெற்றன. சமீபத்தில் ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர், 'பாலத்தின் பணிகள், 100 சதவீதம் முடிந்து விட்டதாக' தெரிவித்தார்.இதையடுத்து, அக்., 30க்குள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர், பாலத்தை ஆய்வு செய்து, சான்று வழங்க உள்ளார். இதன் பின், நவ., 20க்குள் புதிய பாலம் திறப்பு விழாவை நடத்த, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்பு

மிகவும் பழமையான, 110 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாலத்திற்கு மாற்றாக, நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக, பாம்பன் அருகே அக்காள்மடம் அல்லது ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மேடை அமைக்க, ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.பிரதமர் ஹெலிகாப்டரில் வந்திறங்க, அரியாங்குண்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தையும் தேர்வு செய்தனர். இரு ஆண்டுகளுக்கு பின், ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்க இருப்பது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ