உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மூன்றாவது மொழியை கற்பது முத்தான வாய்ப்பு மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு பெற்றோர் வரவேற்பு

மூன்றாவது மொழியை கற்பது முத்தான வாய்ப்பு மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு பெற்றோர் வரவேற்பு

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு வேறு எந்த மாநிலத்திலும் வராத எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது. புதிய கல்விக்கொள்கையின் படி மாணவர்கள் பள்ளியில் மூன்று மொழியை கற்க வேண்டும். முதலில் தாய்மொழி, அடுத்து ஆங்கிலம்; மூன்றாவதாக எந்த மொழியையும் கற்கலாம். ஹிந்தியை தான் கற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. ஆனால் ஹிந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர். மூன்றாவது ஒரு மொழி கற்பது மாணவர்களுக்கு எப்படி பயனுள்ளதாக அமையும்? ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெற்றோர் சொல்வது என்ன...

பிள்ளைகள் பிற மொழி கற்க பெற்றோருக்கு ஆசை

எனக்கு ஆங்கிலம் ஓரளவிற்கு பேசத்தெரியும். அதே சமயம் ஹிந்தி, மலையாளம் போன்ற பிறமொழிகள் தெரியாததால் வெளியூர்களுக்கு செல்லும் போது அந்த மாநில மக்களிடம் பழகுவதற்கு மிகவும் சிரமப்படுகிறேன். இன்றைய நவீன காலத்தில் ஆங்கிலம் மட்டுமின்றி கூடுதலாக பிற மொழிகளை தங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என பெற்றோர் ஆசைப்படுகின்றனர். என் மகனுக்கு ஆங்கிலம் மட்டுமின்றி ஹிந்தி கற்றுத்தர ஆசைப்படுகிறேன். எனவே மத்திய அரசு மும்மொழிகல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்பத்த வேண்டும். அதற்கு முதல்வர் ஸ்டாலின் சம்மதிக்க வேண்டும். அப்போது தான் அரசுப் பள்ளிகளில் படிக்கும் வசதியில்லாத மாணவர்களும் மூன்றாவது மொழியை கற்றுக்கொள்ள முடியும். - ஆர். சரவணக்குமார்ராமநாதபுரம்

ஏழை மாணவர்களுக்கு நல்வாய்ப்பு

தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மூன்றாவது மொழி கற்பிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. அதே வாய்ப்பு அரசுப் பள்ளிகளில் நடைமுறைக்கு வந்தால் ஏழை மாணவர்களும் மூன்றாவது மொழியை தொடக்க கல்வியிலேயே கற்க நல்வாய்ப்பாக அமையும். எனது இரட்டைக் குழந்தைகள் தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் நிலையில் மூன்றாவது மொழி தெரியாத நிலையில் உள்ளனர். அவர்களை மூன்றாவது மொழி கற்பதற்காக தனியாக டியூசனுக்கு பணம் கட்டி அனுப்பினாலும் அவர்கள் சிரமப்படுகின்றனர். தொடக்க கல்வியிலேயே அவர்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தால் கற்பதில் சிரமம் இருந்திருக்காது. எனவே, அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியை நடைமுறைப்படுத்துவதை படித்த பெற்றோராக வரவேற்கிறேன்.- கே.மதிவாணன்ஆர்.எஸ்.மங்கலம்

மாணவர்களின் கல்வியில் அரசியல் கூடாது

வரும் காலத்தில் குழந்தைகளின் நலன் கருதி கட்டாயம் மூன்றாவது மொழி வேண்டும். வெளி மாநிலங்களில் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள மொழி இடையூறாகவே உள்ளது. இதனால் வெளி மாநிலங்களுக்கு படிப்பு, வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்வதற்கே தயக்கம் காட்டும்நிலை உருவாகி இருக்கிறது. அந்த தயக்கம் மாற வேண்டும் என்றால் தமிழகத்தில் மூன்றாவது மொழி கட்டாயம் வேண்டும். வரும் காலங்களில் மாணவர்களின் எதிர்காலம் இதன் மூலம் நல்வாய்ப்பை உருவாக்கும். மாணவர்களின் கல்வியை வைத்து அரசியல் செய்யக்கூடாது. மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து மூன்றாவது மொழி கற்பிக்க வேண்டும்.- எல்.முத்துக்குமார்அபிராமம்

அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு வரப்பிரசாதம்

அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்ட மும்மொழி கொள்கை தமிழ்நாட்டிற்கும் அவசியமாகிறது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி மூன்றாவது மொழி உட்பட பல மொழிகளையும் கற்றுத் தருகிறார்கள். ஆனால் அரசு நடத்தும் அனைத்து வகையான பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் மட்டுமே இருக்கிறது. ஹிந்தியை திணிப்பதாக கூறும் நிலையில் மத்திய அரசு ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்பிக்க கூறுகிறது. இது ஏழை, எளிய மக்களுக்கு வரப் பிரசாதமாக அமையும். மேலும் கூடுதல் மொழியை கற்பதால் மாணவர்களின் அறிவுத்திறன் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே தற்போதைய போட்டி உலகில் மூன்றாவது மொழியை கற்பிப்பதில் அரசுக்கு எந்த குழப்பமும் இருக்கக்கூடாது.- ஏ.எச்.லோகேஸ்வரன்பரமக்குடி

மாணவர் எண்ணங்களை பூர்த்தி செய்யுங்கள்

---------------தமிழ், ஆங்கிலம், அடுத்தபடியாக ஹிந்தி கற்பது தற்போதுள்ள காலகட்டத்தில் அத்தியாவசியத் தேவையாகும். மொழி குறித்த விஷயங்களை வைத்து அரசியல் செய்யாமல் மாணவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் விதமாக மூன்றாவது மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்வது வருங்காலத்தில் பயன் தரக்கூடிய விஷயம். பொதுவாக அரசுப் பள்ளிகளில் மட்டுமே மூன்றாவது மொழி கற்றுக் கொள்வது குதிரை கொம்பாக உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் விருப்பத்திற்கு ஏற்ற மொழிகளை கற்றுக் கொள்ளும் தனித்துவத்தை பெற்றுள்ளனர். ஏழை மாணவர்கள் விருப்பம் போல் விரும்பிய மொழியான ஹிந்தி மற்றும் பிற மொழிகளையும் கற்று பயனடைவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. பிராக்டிக்கலாக சிந்தித்தால் மொழி புலமை அனைவருக்கும் அவசியம்.- எஸ்.செல்வராஜ்தினைக்குளம் - நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி