ராமேஸ்வரத்தில் தரமற்ற ரோடு பணிக்கு மக்கள் எதிர்ப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சியில் தரமற்ற முறையில் பேவர்பிளாக் சாலை அமைத்ததால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராமேஸ்வரம் நகராட்சியில் உள்ள சிவகாமி நகர், ஏரகாடு, ஆத்திக்காடு பகுதியில் ரூ.65 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நகராட்சி நிர்வாகம் டெண்டர் விடப்பட்டு நேற்று பணி துவங்கியது. இதில் சிவகாமி நகரில் ஏற்கனவே இருந்த சிமென்ட் சாலை மீது மணல் பரப்பி, அதன் மீது பேவர்பிளாக் சாலை அமைத்தனர். இதற்கு தெரு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பழைய சாலையை அகற்றி விட்டு அதன் மீது மணல் பரப்பி சாலை அமையுங்கள். அப்போது தான் மழைக் காலத்தில் சாலையில் தண்ணீர் நிற்காமல் நிலத்திற்குள் செல்லும் எனக் கூறி சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை யிட்டனர். இதனால் சாலை அமைக்கும் பணியை ஊழியர்கள் நிறுத்தினர். பின் அதிகாரிகள் சமரசம் செய்து பழைய சாலையை உடைத்து அகற்றிய பின் புதிய சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.