உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடி தாலுகாவில் பெயரளவிற்கு நடத்தப்படும் ஜமாபந்தி முகாம் தொடர் குளறுபடியால் மனுதாரர்கள் பாதிப்பு

கடலாடி தாலுகாவில் பெயரளவிற்கு நடத்தப்படும் ஜமாபந்தி முகாம் தொடர் குளறுபடியால் மனுதாரர்கள் பாதிப்பு

கடலாடி : கடலாடி தாலுகாவில் நடக்கும் ஜமாபந்தி முகாமில் குளறுபடிகள் இருப்பதாகவும் அவற்றிற்கு உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடலாடி தாலுகாவில் 42 வருவாய் கிராமங்கள் உள்ளன. பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் தங்களுக்கான பட்டா மேல்முறையீடு, யூ.டி.ஆர்.,நில மேல் முறையீடு தொடர்பான தனிப் பதிவேடுகள் குறித்தும் பல்வேறு வகையான மனுக்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் வழங்கப்பட்ட மனுக்களுக்கு தற்போது வரை முறையான தீர்வு இல்லாத நிலை தொடர்வதாக பயனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நா.த.க., மாவட்டச் செயலாளர் நரிப்பையூரைச் சேர்ந்த சிவா கூறியதாவது: கடலாடி தாலுகா அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஜமாபந்தி முகாமில் அதிகளவு குளறுபடி நிகழ்கிறது. ஒரு மனு கொடுத்தால் அதற்கான தீர்வையும், நிவர்த்திக்குரிய முறையையும் பதில் அளிக்க வேண்டும். மாறாக வாய்மொழியாக கூறி தொடர்ந்து விவசாயிகளையும் பொதுமக்களையும் அலைக்கழிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். ஜமாபந்தி நடக்கக்கூடிய விவரம் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு முன்பாக அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். கடலாடி தாலுகா அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் நடந்த ஜமாபந்தியில் எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளது என கோரியதற்கு பொது தகவல் அலுவலர் 290 மனு முடிக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும் தகவல் தருகிறார். ஜமாபந்தியில் 30 நாள்களுக்குள் நிலம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்னையானாலும் தீர்க்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் திட்டமாகும். தற்போது பத்து சதவீதம் கூட மனுக்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை. மனுவை மாறுதல் செய்கிறோம் என்ற பெயரில் தொடர்ந்து காலம் தாழ்த்தி விவசாயிகள், முதியவர்களை தொடர்ந்து அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கி வருகின்றனர். இது குறித்து கலெக்டர் மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு புகார் மனு அனுப்பி உள்ளேன். மாவட்ட ஆய்வு குழு அலுவலர் பொதுமக்களால் கொடுக்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பெயரளவிற்கு நடத்தப்படும் ஜமாபந்தியால் எந்த பயனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ஜமாபந்தியில் வழங்கக்கூடிய மனுக்களை முறைப்படுத்தி பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை