போலீஸ் ஸ்டேஷனில் கைதி உயிரிழந்த வழக்கு: சாட்சியிடம் குறுக்கு விசாரணை
ராமநாதபுரம்: பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் கைதி உயிரிழந்த வழக்கில் மாவட்ட முதன்மைநீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., யிடம் குறுக்கு விசாரணை நடந்தது. இதன்பின் வழக்கை ஜூலை 14க்கு தள்ளி வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.மதுரையை சேர்ந்த ராமானுஜன் மகன் வெங்கடேசன் 26. திருட்டு வழக்கு தொடர்பாக 2012- அக்.,2-ல்பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட வெங்கடேசன்இறந்தார். போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.வழக்குப்பதிவு செய்யப்பட்டு அப்போதைய எஸ்.ஐ., முனியசாமி உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.பின் வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஓய்வு பெற்ற எஸ்.ஐ., முனியசாமி ஜாமினில் வந்த பின் உடல் நலக்குறைவால் இறந்தார். இந்த வழக்கில் ஏட்டு பரமக்குடி ஞானசேகரன், மஞ்சூர் கிருஷ்ணவேல், ஆப்பநாடு கோதண்டராமன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.இதில் ஞானசேகரன், கிருஷ்ணவேல், கோதண்டம் ஆகியோர் ஆஜராகினர்.அரசு தரப்பில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., சாகுல் ஹமீது சாட்சியை அரசு மாவட்ட தலைமை வழக்கறிஞர் கார்த்திகேயன் பதிவு செய்திருந்தார். இதனை வழக்கறிஞர் செல்லமணி சாகுல் ஹமீதிடம் குறுக்கு விசாரணை செய்தார்.பின் மாவட்ட முதன்மை நீதிபதி மெகபூப் அலிகான் வழக்கு விசாரணையை ஜூலை 14க்கு தள்ளி வைத்தார்.