மாணவிகளிடம் தவறாக பேசிய ஆசிரியருக்கு தொடரும் எதிர்ப்பு ; எந்த பள்ளியிலும் பணியாற்ற முடியவில்லை
கமுதி; ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவிகளிடம் தவறாக பேசிய ஆசிரியர் சரவணன் வேறு பள்ளிகளில் பணியாற்றவும் பெற்றோர், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக சரவணன் பணி யாற்றினார். இவர் தவறாக பேசியதாக மாணவிகள் புகார் அளித்தனர். இதை யடுத்து சரவணனை திருவாடனை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் செய்து உத்தரவிட்டனர். அங்கும் எதிர்ப்பு எழுந்ததால் கமுதி அருகே கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றினர். ஜூலை 15ல் அங்கு வந்த ஆசிரியர் சரவணனுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை அனுமதித்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர் கூறினர். இதையடுத்து ஆசிரியர் சரவணன் பள்ளிக்கு வரவில்லை. நேற்று மீண்டும் பள்ளிக்கு வந்தார். அப்போதும் மாணவர்கள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கோவிலாங்குளம் இன்ஸ்பெக்டர் கஜேந்திர னும் பேச்சு வார்த்தை நடத்தினார். சரவணனை இப்பள்ளியில் பணி அமர்த்த மாட்டோம் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர்.