உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அஸ்திவாரத்தோடு நிற்கும் சுனாமி வீடுகள் : உதவித்தொகை இன்றி மீனவர்கள் அவதி

அஸ்திவாரத்தோடு நிற்கும் சுனாமி வீடுகள் : உதவித்தொகை இன்றி மீனவர்கள் அவதி

ராமநாதபுரம் : ஏர்வாடி அருகே அஸ்திவாரத்தோடு சுனாமி வீடுகளின் பணி நிறுத்தப்பட்டதால், வாடகை உதவித்தொகையும் கிடைக்காமல் மீனவர்கள் அவதிப்படுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது பிச்சை குப்பன் வலசை, சடை முனியன் வலசை. இங்குள்ள மீனவர்களுக்கு உலக வங்கி உதவியுடன், சுனாமி மறு கூட்டமைப்பு திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தலா 3.10 லட்ச ரூபாயில், 2010 செப்டம்பரில் வீடுகள் கட்ட துவங்கி, 2011 டிசம்பரில் முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து மீனவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. அஸ்திவாரம் அமைக்க குழிகள் மட்டும் தோண்டப்பட்டன. இதையடுத்து மீனவர்கள் அருகில் உள்ள, ஏர்வாடியில் வாடகை வீடுகளில் தங்கி வந்தனர். இதற்கு அரசு சார்பில் மாதந்தோறும் 500 ரூபாய் வழங்கப்பட்டது. இதுவும் கடந்த இரண்டு மாதமாக வழங்கப்பட வில்லை.

இதே போல் பனைக்குளம் அருகே சோகையன் தோப்பில் 100க்கும் மேற்பட்ட சுனாமி வீடுகள் அஸ்திவாரத்தோடு பணி பாதியில் நிறுத்தப்பட்டது. சடைமுனியன் வலசையை சேர்ந்த ஆண்டி கூறியதாவது: கடந்த 11 மாதங்களாக எந்த பணியும் நடக்கவில்லை. காற்றால் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாடகை உதவித்தொகையும் வழங்காததால் மிகவும் சிரமப்படுகிறோம். விரைவில் வீட்டை கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். ஊரக வளர்ச்சித்துறை இளநிலை பொறியாளர் சேகு கூறியதாவது: இந்த பணிகளை ஆந்திர நிறுவனம் கான்ட்ராக்ட் எடுத்துள்ளது. நாங்கள் வேலை முடிக்க கேட்டபோது, பணியாளர்கள் இல்லை, என்று கூறுகின்றனர். அடுத்த மாதத்திலிருந்து பணிகள் தொடங்க சொல்லி கூறியுள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை