| ADDED : டிச 05, 2025 06:18 AM
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கிளில் மருந்துகள் பற்றாக்குறையால் கேட்ட மருந்துகள் கிடைக்காததால் நோயாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர். திருவாடானை தாலுகாவில் கோனேரிகோட்டை கூட்டுறவு சங்கம் சார்பில் திருவாடானையிலும், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் வலமாவூர் கூட்டுறவு சங்கம் சார்பில் திருப்பாலைக்குடியிலும், தனியார் தொழில் முனைவோர் சார்பில் ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்துார் ஆகிய நான்கு இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் கடந்த பிப்.,24 ல் திறக்கப்பட்டது. தரமான மருந்துகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குவது இந்த மருந்தகத்தின் நோக்கம். ஒவ்வொரு மருந்தகத்திலும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 200க்கும் மேற்பட்ட வகையான மருந்துகளில் 20 முதல் 30 சதவீதம் மருந்துகளே இருப்பில் உள்ளது. மக்கள் கூறுகையில் சில நாட்களாக சுகர், ரத்த அழுத்தம், இன்சுலின் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளது. மாத்திரை சீட்டு கொண்டு சென்றால் பாதி வாங்கிவிட்டு மீதி மாத்திரைக்கு வேறு மருந்துகடைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சிலர் மொத்தமாக வாங்கி சென்று விடுவதால் தட்டுப்பாடு உள்ளது. மலிவு விலைக்கு மருந்துகள் விற்பது நல்ல விஷயம் தான். அதே நேரம் அனைத்து நோய்களுக்கான மாத்திரைகளையும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கினால் நல்லது. பத்து மருந்துகள் கேட்டால் இரண்டு மட்டுமே கிடைக்கிறது. மாத்திரை கவர்களும் இல்லாததால், கையில் வாங்கி செல்லும் போது தவறி விழுந்து விடுகிறது. மாவட்டம் முழுவதும் இதே நிலை தான் உள்ளது. இதனால் ஏன் அங்கு சென்று அலைய வேண்டும் என பலர் புறக்கணிக்கின்றனர். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து அனைத்து வகையான மருந்துகளும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ---