| ADDED : மே 07, 2024 05:06 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 94.89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 15ம் இடம் பிடித்துள்ளனர். முந்தைய இரண்டு ஆண்டுகளில் 3வது, 12வது இடங்களில் இருந்து பின்னடைவை சந்தித்துள்ளது.தமிழகத்தில் நேற்று (மே 6ல்) பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. வழக்கம் போல மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 2022ல் 3வது இடம், கடந்தாண்டு 12ம் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 160 பள்ளிகளில் 60 பள்ளிகளில் மட்டுமே நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.மாவட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 7247 மாணவிகள், 6302 மாணவர்கள் என 13,549 பேர் எழுதினர். தேர்வு முடிவுகளின் படி 5850 மாணவர்கள், 7007 மாணவிகள் தேர்ச்சி அடைந்து 94.89 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 15ம் இடம் கிடைத்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு 593, 588, 587 எடுத்துள்ளனர். அரசு பள்ளியில் 573ம், அரசு உதவிபெறும் பள்ளியில் 584 எடுத்துள்ளனர்.தேர்ச்சியில் பின்னடைவு: கடந்த 2021-22 கல்வி யாண்டில் 97.20 சதவீதம் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றிருந்த நிலையில், 2022-23 ல் 96.30 சதவீதம் பெற்று 12ம் இடம் பெற்றனர். தற்போது மேலும் பின்னடைவை சந்தித்து 2023-24 கல்வி ஆண்டில் 94.89 சதவீதம் பெற்று 15 இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக 71 அரசு பள்ளிகளில் 19ம், 36 உதவி பெறும் பள்ளிகளில் 4 மட்டுமே நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. எனவே அரசு, உதவிபெறும் பள்ளிகளில் தேர்ச்சி குறைவிற்கான காரணத்தை கண்டறிந்து மாவட்டத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்த கலெக்டர் விஷ்ணுசந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கூறுகையில், மாவட்டத்தில் 160 மேல்நிலைப் பள்ளிகளில் அரசு பள்ளிகள் 19 உட்பட 60 பள்ளிகள் நுாறுசதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 46 பள்ளிகள் 95 சதவீதம், 34 பள்ளிகள் 90-95 சதவீதம், 12 பள்ளிகள் 85-90 தேர்ச்சி பெற்றுள்ளன. 8 பள்ளிகள் மட்டுமே 85 சதவீதத்திற்கு கீழே உள்ளனர். மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.