உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஒரு மாதமாக தேங்கிய கழிவுநீர் வீட்டைக் காலிசெய்யும் மக்கள் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் அலட்சியம்

 ஒரு மாதமாக தேங்கிய கழிவுநீர் வீட்டைக் காலிசெய்யும் மக்கள் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் அலட்சியம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் பாதாளச் சாக்கடை வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், பாதாளச் சாக்கடைகளிலிருந்து கழிவுநீர் வெளியேறி வீடுகளுக்குள் ஒரு மாதத்திற்கும் மேல் தேங்கியுள்ளது. இதனால் வீடுகளை காலி செய்து வருகின்றனர். இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. கலெக்டரும் கண்டுகொள்ளவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் பாதாள சாக்கடை சரியாக பராமரிக்கப்படாமல் வீதிகளில் தேங்குகிறது. பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். கழிவுநீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீலகண்ட ஊருணி அருகே உள்ள தொன்னை குருசாமி தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டது. கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்ட போது குறைவான குடும்பங்களே இருந்தன. நகரமயமாதல் காரணமாக நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கேற்ப எவ்வித அடிப்படை வசதிகளும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனால் பெரும்பாலான நாட்கள் கழிவுநீர் நிரம்பி தெருக்களில் ஆறாக ஓடும். கடந்த ஒரு மாதமாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் சென்றுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்து வருகின்றனர். இது குறித்து தொன்னை குருசாமி தெரு சஞ்சாரம் கூறியதாவது: கடந்த ஒரு மாதமாக இந்த பகுதியில் கழிவுநீர் வெளியேறி குடியிருப்புக்குள் தேங்கியுள்ளது. இது குறித்து நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்துள்ளோம். அவர்கள் மெயின்ரோட்டில் உள்ள அடைப்புகளை மட்டும் எடுத்துவிட்டு செல்கின்றனர். ஆனாலும் தற்போது வரை கழிவுநீர் வடியவில்லை. கடந்த இருநாட்களாக காய்ச்சல் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். தற்போது அங்கு வசிக்கமுடியாமல் அருகில் உள்ள உறவினர் வீட்டில் வசிக்கின்றேன். இதே நிலை நீடித்தால் ஊரை காலி செய்து வேறு எங்காவது செல்ல வேண்டும் என்றார். ராஜசூர்யா கூறுகையில், கழிவுநீர் வீட்டிற்குள் தேங்கியுள்ளதால் உணவு சமைக்க கூட முடியவில்லை. சொந்த ஊரிலேயே குடும்பத்துடன் ஓட்டலில் சாப்பிடுகிறோம். இதனால் எனது தந்தைக்கு காலில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் முறையாக பதில் அளிப்பதில்லை. இப் பகுதியில் கழிவுநீர் குழாய் சிறிதாக இருப்பதால் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. பாதாள சாக்கடை திட்டத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி