உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் -- தாம்பரம் விரைவு ரயில் மண்டபத்தில் நின்று செல்ல வலியுறுத்தல்

ராமேஸ்வரம் -- தாம்பரம் விரைவு ரயில் மண்டபத்தில் நின்று செல்ல வலியுறுத்தல்

ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் தினசரி ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர். பாம்பன் புதிய பாலம் திறப்பின் போது ராமேஸ்வரம்--தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிற்காமல் நேரடியாக ராமநாதபுரத்தில் நிற்பதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் மண்டபத்திலும், போட் மெயில் எக்ஸ்பிரஸ் பாம்பன், மண்டபம் என இரு நிறுத்தங்களிலும் நின்று செல்கிறது. இந்த இரு ரயில்களும் ராமநாதபுரம், சிவகங்கை காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. அதேநேரத்தில் புதிதாக இயக்கப்படும் ராமேஸ்வரம்--தாம்பரம் விரைவு ரயில் (எண் 16104) அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு (தாம்பரம்) செல்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து இவ்வழிதடத்தில் இயக்கப்படும் ஒரே ரயில் என்பதால் அப்பகுதிகளுக்கு செல்லும் மக்கள் அதிகம் இந்த ரயிலை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி தாம்பரத்திற்கு அதிகாலை 3:45 மணிக்கு ரயில் சென்றுவிடுவதால் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வருவோர் சென்னை திரும்ப இந்த ரயில் வசதியாக உள்ளது. தற்போது தினசரியாக இயக்கப்பட்டு வரும் ரயில் மண்டபத்தில் நிற்காமல் செல்வதால் மண்டபம் கேம்ப், மரைக்காயர்பட்டினம், கூரப்பள்ளி, வேதாளை, இடையர்வலசை, சட்டகோன்வலசை, பிரப்பன்வலசை, நொச்சியூரணி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் 20 முதல் 50 கி.மீ பயணித்துராமேஸ்வரம், ராமநாதபுரம் ரயில் நிலையத்தை நாட வேண்டியுள்ளது. இந்த ரயில் மண்டபத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி