உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மாணவி கொலை : உடன் சென்ற மாணவிக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

ராமேஸ்வரம் மாணவி கொலை : உடன் சென்ற மாணவிக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவியை பள்ளிக்கு செல்லும் வழியில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடன் சென்ற மற்றொரு மாணவிக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி ஷாலினியை ஒரு தலையாக காதலித்த போதை இளைஞர் முனியராஜ் 21, கத்தியால் குத்திக்கொலை செய்தார். இச்சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஷாலினியுடன் மற்றொரு பிளஸ் 2 மாணவியும் உடன் சென்றுள்ளார். அவர் கொலையை நேரில் பார்த்த பதட்டத்தில் உள்ள நிலையில் அவரை போலீசார் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்த்துள்ளனர். அந்த மாணவியை எதிர்காலத்தில் முனியராஜ் உறவினர்கள் அச்சுறுத்தும் வாய்ப்புள்ளதால் பிறழ் சாட்சியாக மாற வாய்ப்பு உள்ளது. அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் கூறியதாவது: ஷாலினியுடன் மற்றொரு மாணவி நடந்து சென்றதால் அவர் முக்கிய சாட்சியாக உள்ளார். அவரது எதிர்கால நலன் கருதி இப்போதே நீதிபதி மூலம் மாணவியின் சாட்சியை ரகசியமாக பதிவு செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !