| ADDED : நவ 24, 2025 12:36 AM
ராமேஸ்வரம்: ''ராமேஸ்வரம் - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் துவங்கும்,'' என, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார். ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு பணிகளை நேற்று அவர் ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது: ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு பணிகள் அடுத்தாண்டில் முடிந்து பயணியர் பயன்பாட்டிற்கு வரும். தற்போது, பாம்பன் பாலத்தில் நிர்ணயித்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரம் - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் போக்குவரத்து, விரைவில் துவங்கும். இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும். ராமேஸ்வரம் அருகே பாம்பன் முதல் சத்திரக்குடி ரயில்வே ஸ்டேஷன் வரை அருகிலேயே டாஸ்மாக் கடைகள் இருந்தாலும், குடிமகன்களால் ரயில் பயணியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரயில்வே போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதில் பிரச்னை அதிகரித்தால், டாஸ்மாக் கடைகளை அகற்ற, தமிழக அரசிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.