| ADDED : பிப் 17, 2024 02:17 AM
ராமநாதபுரம்:-அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை ஆப்பரேஷன் செய்யப்பட்ட இளம் பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் ராமநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தடுத்த போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே மருதுார் விவசாயி சதீஷ் 33. இவரது மனைவி கீதா 24. இவர்களுக்கு இரண்டரை வயதில் மதுனிகா என்ற பெண் குழந்தையும், அபிமன்னன் என்ற இரண்டு மாத ஆண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் நேற்று காலை கீதா உள்ளிட்ட ஏழுபேருக்கு நயினார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை ஆப்பரேஷன் செய்யப்பட்டது. இதில் கீதாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது.இதையடுத்து காலை 10:00 மணிக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பினர். ஆனால் வழியில் கீதா உயிரிழந்ததாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். மறியல்
இதனால் ஆத்திரமடைந்த கீதாவின் உறவினர்கள் அவரது ஆண் குழந்தையுடன் ராமநாதபுரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்ததால் கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 15 நிமிட போராட்டத்திற்கு பின் மறியல் செய்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து கீதாவின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர். சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.பரமக்குடி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் இந்திரா கூறுகையில் ''பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இதில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொதுமக்கள் புகார்
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட ராமேஸ்வரம் ஆட்டோ டிரைவர் மனைவி ரேகாவுக்கு 33, ஆப்பரேஷன் செய்யப்பட்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதுபோன்று சம்பவங்கள் இங்கு தொடர்வதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள், உயரதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.