அரசு தலைமை மருத்துவமனையில் 5 தளங்களுடன் கட்டுமானப் பணி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
பரமக்குடி: பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை 5 தளங்களுடன் கட்டுமான பணிகள் நடக்கும் நிலையில் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடி அரசு மருத்துவமனை 1977-ல் துவங்கி 50 வது ஆண்டை நோக்கி செல்கிறது. இங்கு 1000 புறநோயாளிகள், 150 க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஒவ்வொரு மாதமும் நுாறுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கிறது. 2023 பிப்.,28ல் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் 5 தளங்களுடன் கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டி ரூ.57.50 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. 25 ஆயிரம் சதுர அடியில் இங்கு நவீன மருந்தகம், ஸ்கேன், எக்கோ, எம்.ஆர்.ஐ., எக்ஸ்ரே, சி.டி., ஸ்கேன், ஆபரேஷன் தியேட்டர்கள், அவசர சிகிச்சை, தீக்காயம், விபத்து, சித்தா பிரிவுகள் இயங்க உள்ளது.தற்போது உள்பகுதியில் குறுகிய இடத்தில் நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. மேலும் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.இதனால் விபத்து மற்றும் அவசர சிகிச்சை உட்பட தேவையான மருத்துவ கட்டமைப்புகள் இல்லாததால், ராமநாதபுரம் மற்றும் மதுரை என நோயாளிகள் அனுப்பி வைக்கப்படும் நிலை உள்ளது. எனவே கட்டடப் பணிகளை மேலும் வேகப்படுத்தி போதிய மருத்துவ அலுவலர்களை நியமித்து அதிகமான மக்கள் தொகை கொண்ட பரமக்குடி மற்றும் சுற்று வட்டார மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.