விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு கோரிக்கை
திருப்புல்லாணி: வேளாண் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய மானியம் மற்றும் திட்டங்கள் குறித்து எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, ரெகுநாதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நெல், மிளகாய், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட சிறு குறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது பெருவாரியான நெல் வயல்களில் எதிர்பார்த்த மலையை காட்டிலும் கூடுதலாக மழை பெய்து நிலத்தில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் பெருவாரியான விவசாயிகள் ஆண்களுக்கு ரூ.1000 மற்றும் பெண்களுக்கு ரூ.500 வீதம் கூலி கொடுத்து அறுவடை செய்கின்றனர். விவசாயிகள் கூறியதாவது: திருப்புல்லாணி வட்டாரத்தில் உள்ள பெருவாரியான விவசாயிகளுக்கு தற்போது சாகுபடி காலம் முடிந்த பின்பு விளைவிக்க கூடிய பயிர்கள் குறித்த விபரங்களையும் மானியங்கள் அரசின் நலத்திட்டங்கள் பற்றி உரிய முறையில் எடுத்துரைக்க வேண்டும். பெயரளவில் வேண்டப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமே தெரிவிக்கின்றனர். எனவே அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.