ஆருத்ரா விழாவில் மரகத நடராஜருக்கு இன்று சந்தனம் களைதல், அபிேஷகம் 12 மணி நேர தொடர் நாட்டியாஞ்சலி
உத்தரகோசமங்கை:-ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் பச்சை மரகத நடராஜருக்கு இன்று (ஜன.,12) காலை சந்தனம் படி களைதல், நாள் முழுவதும் அபிேஷகம் நடக்கிறது.உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வடக்கே தனி சன்னதியில் உள்ள பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனம் இன்று காலை 8:30 மணிக்கு களையப்படுகிறது.அதன்பின் நாள் முழுவதும் மூலவர் மரகத நடராஜர், சிவகாமி அம்மனின் திருமேனியில் 32 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. பின்னர் சந்தனாதி தைலம் பூசப்படுகிறது.இரவு 11:30 மணிக்கு மேல் திரை மூடப்பட்டு புதிய சந்தன காப்பு மற்றும் அலங்கார மாலைகள் சூட்டப்படுகிறது. நாளை அதிகாலை 2:00 மணிக்கு பிறகு அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இன்று மாலை 6:00 முதல் நாளை காலை 6:00 மணி வரை நாட்டியாஞ்சலி நடக்கிறது.நாளை காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமான் திருவீதி உலாவும், மாலை 5:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், இரவு மாணிக்கவாசக பெருமானுக்கு காட்சி கொடுத்து சோடச உபசார அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.